ஆம் ஆத்மி கட்சி இந்திய அரசியலில் அனைத்துக் கட்சியினரையும் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. காங்கிரஸ் - பாஜக - இடது சாரிகள் இவற்றிலிருந்து வித்தியாசமாக ஆம் ஆத்மி கட்சி எந்தவிதமான அரசியல் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது?
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் அதன் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு “அரசியல் என்பது இனி இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நடக்க முடியாது” என்று பல பேட்டிகளில் வலியுறுத்திக் கூறுகிறார். காங்கிரசுக்குப் பதிலீடாக பாஜக என்ற நிலை மாறிவிட்டது. “நாங்கள் பதிலீடு அல்ல மாற்று” ‘Alternative not a Substitute” என்ற முழக்கம் பாஜகவுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் முக்கியமான புள்ளியாக இருக்கிறது.
ஆம் ஆத்மி வலியுறுத்தும் மாற்று எப்படியானது?
ஆயிரம் ஆண்டுகள் - இந்திய அரசியல் சூழலில் சொல்வ தென்றால் 60 ஆண்டுகள் - கண்ணாடிக் குடுவையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பூதத்தைத் திறந்து விடுவதுதான் ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் மாற்று.
புதுடெல்லியில் தர்ணாவை அறிவித்த போது பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவித்தார் அர்விந்த் கேஜ்ரிவால். பின்னர். தில்லி மக்களே தர்ணாவில் கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக - தில்லி நடுத்தர மக்களுக்குப் பதிலாக அடிப்படை உழைக்கும் மக்களே தர்ணாவில் திரண்டனர். வெகுமக்களின் அடிப்படைப் பிரிவினரான உழைக்கும் மக்களைப் போல தர்ணாவின் இரண்டு நாட்களிலும் நடுத்தெருவில் படுத்து உறங்கிய அர்விந்த் கேஜ்ரிவாலால் அம்மக்களுடைய போலீசாருக்கு எதிரான கோபங்களை இறுதிவரை கொண்டு செல்ல முடியவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் அரசாங்க அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான மனநிலையை மட்டும் அர்விந்த் கேஜ்ரிவாலால் பின் தொடர முடிகிறது என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி, இதுவரையில் கிராமப்புற மக்களின் எந்த ஒரு பிரச்னையையும் முன்னெடுக்க வில்லை. நகர்ப்புற மத்தியத்தர வர்க்கக் கட்சியாகவே அது இருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியால் முன்வைக்கப்படும் “நேரடி ஜனநாயகம்” என்ற கருத்தின் “குட்டை” இந்த தர்ணா போராட்டம் என்ற முட்டை உடைத்துக் காட்டியிருக்கிறது.
சாதாரணனின் பிரதிநிதியான ஆம் ஆத்மி கட்சி, சாதாரணின் பெயரால் சட்டத்தின் செயலின்மைக்கு எதிராக செயல்படும். சாதாரணனின் பிற்போக்கான கருத்துக்களையும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அரசு எந்திரத்தின் பல்வேறு அங்கங்களிலும் தலையிடும். இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் புதியதொரு வெகுஜன அரசியலின் தன்மை.
இந்தத் தன்மைதான், தெற்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதிக்கு, சாதாரண மக்களின் கோரிக்கைகளின் பேரில் ஆஃப்ரிக்கப் பெண்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்கள், ஆஃப்ரிக்கர்கள் அனைவரும் போதை மருந்து கடத்துபவர்கள், என்ற சாதாரணனின் கருத்தை சிரம் மேற்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் துணிச்சலைக் கொடுத்தது.
இது பரந்துபட்ட ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது. சர்வாதிகார மனப்பான்மையை நோக்கி நகர்வதற்கே வழிவகுக்கும்.
ஜனநாயக அரசியலமைப்பு வெகுமக்களின் பங்கேற்பையும் அவர்களது அடிப்படை கோரிக்கைகளையும் பல தசாப்தங்களாக நிறைவேற்றத் தவறும்போது, அந்த நிறுவனங்களின் மீதான அவர்களது கோபத்தைக் “கண்ணாடிக் குடுவைக்குள் அடைபட்டிருந்த பூதத்தை” திறந்து விட்டு, குளிர் காயும் அரசியலே ஆம் ஆத்மி கட்சியின் வலதுசாரி வெகுஜன அரசியல் என்று சொல்லலாம்.
(வளர்மதி, ஓர் அரசியல் ஆய்வாளர்)
பிப்ரவரி, 2014.